ஜியோ அறிமுகமானதிலிருந்து தொலைத்தொடர்பு சேவைகளில் அடுத்தடுத்து அதிரடியான மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதில் மிக முக்கியமாக ஜியோ, தன் வாடிக்கையாளர்களை புது புது சலுகைகளைக் கொடுத்து ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது. அதன் அடுத்தகட்ட நகர்வாக ஜியோ நிறுவனம் ஜிகா ஃபைபர் (GigaFiber) என்னும் பிராட் பாண்ட் சேவையில் இறங்கியிருக்கிறது. இதன் அறிமுகத் தேதியை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அதற்கான நடவடிக்கைகளில் ஜியோ இறங்கிவிட்டது. இதுவரை மொபைல்களிலும் மோடங்களிலும் மட்டுமே தன் இணையதள சேவையை வழங்கிவந்தது. இனி ஜியோ இணையதள சேவையை ஜிகா ஃபைபர் மூலமாகவும் உபயோகிக்கலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதை வீடுகளிலும் அலுவலகங்களிலும் உபயோகிக்கலாம் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் இணைய சேவையின் வேகம் 1 ஜிபிபிஎஸ் (1GBps) அளவிற்கு இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால், இந்த சேவையை பெறுவதற்கு ஜியோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ தளத்தில் முதலில் வாடிக்கையாளர்கள் பதிவு செய்யவேண்டும், அதன் பிறகுதான் ஜியோவின் சேவையை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தமுடியும். இந்தப் பதிவின் மூலம் எவ்வளவு நபர்களுக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஜியோவின் ஜிகா ஃபைபர் சேவை தேவைப்படுகிறது என்று கண்டறிந்து அங்கு ஜியோ தனது ஜிகா ஃபைபர் சேவையை தரும் என்று ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது. ஜியோ அதிகாரப்பூர்வ தளத்தில் இதை எப்படி பதிவுசெய்வது என்பதை பார்ப்போம்.
ஜியோவின் அதிகாரப்பூர்வ தளத்தினுள் சென்றால், கூகுள் லொக்கேஷன் மூலம் ஜியோ உங்கள் இடத்தைக் கண்டறிந்துகொள்ளும். பிறகு அதிகமானோருக்கு தேவைப்படும் இடத்தில் ஜிகா ஃபைபர் தனது சேவையை தரும். இதில் உங்கள் பெயரும் ஃபோன் நம்பரும் தரவேண்டியதாக இருக்கும். அதன் மூலம் ஓ.டி.பி. எண்ணைப் பெற்று உங்களுக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.