இந்தியா உட்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக ஃப்ரான்ஸ், இஸ்ரேல் ஆகிய நாடுகள் விசாரணையில் இறங்கியுள்ளன. இந்திய உச்ச நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக விசாரணை நடந்துவருகிறது. இந்தச் சூழலில், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க வல்லுநர் குழுவை அமைக்க தயார் என பிரமாண பத்திரம் தாக்கல் செய்த மத்திய அரசு, சட்டவிரோதமாக எந்த ஒட்டுக்கேட்பும் நடைபெறவில்லை என கூறியதோடு, தேசிய பாதுகாப்பு தொடர்பான காரணங்களால் மத்திய அரசு பெகாசஸைப் பயன்படுத்தியதா என்பது குறித்து பிரமாண பத்திரத்தில் கூற முடியாது எனவும், இந்த விவகாரம் குறித்து அரசுடன் தொடர்பற்ற வல்லுநர்களின் குழுவை அமைக்க அனுமதித்தால் அந்தக் குழுவின் முன்னர் பெகாசஸ் பயன்படுத்தப்பட்டதா இல்லையா என தெரிவிக்க தயார் எனவும் கூறியது.
இதனைதொடர்ந்து, பெகாசஸ் விவகாரத்தில் விசாரணை கோரி தாக்கல் செய்தவர்களின் வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், பெகாசஸ் விவகாரத்தில் இரண்டு, மூன்று நாட்களில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் என கடந்த மாதம் தெரிவித்தனர்.
இந்தநிலையில், நாளை (27.10.2021) பெகாசஸ் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் இடைக்கால உத்தரவைப் பிறப்பிக்கவுள்ளது.