நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில், முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று 102 இடங்களுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்டமாக மே 7ஆம் தேதி அன்று 93 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்த கட்டத் தேர்தல்களை எதிர்கொண்டு பல மாநிலங்களில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், மே 13ஆ தேதி அன்று நான்காம் கட்டமாக தெலுங்கானாவில் நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார். அதன்படி, தெலுங்கானா மாநிலம், போங்கிர் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “2024 தேர்தலானது ராகுல் காந்தி மற்றும் நரேந்திர மோடிக்கு இடையிலான தேர்தல். இது ‘ஜிஹாத்துக்கு வாக்களியுங்கள்’ என்பதற்கு எதிராக ‘வளர்ச்சிக்கு வாக்களியுங்கள்’ என்று போட்டியிடும் தேர்தல். காங்கிரஸ், பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்), மற்றும் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிம் (ஏஐஎம்ஐஎம்) ஆகிய கட்சிகள் திருப்திப்படுத்தும் அரசியலை செய்கிறார்கள். இவர்கள் ‘ஹைதராபாத் விடுதலை நாள்’ (செப்டம்பர் 17) கொண்டாட அனுமதிக்கவில்லை. இந்த மக்கள் சி.ஏ.ஏ.ஐ எதிர்க்கின்றனர். இவர்கள் ஷரியா மற்றும் குரான் அடிப்படையில் தெலுங்கானாவை ஆட்சி செய்ய விரும்புகிறார்கள். 2019ல் தெலுங்கானாவில் 4 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றாலும், இம்முறை 10 இடங்களில் வெற்றி பெறும். இந்த இரட்டை இலக்க மதிப்பெண் பிரதமர் மோடிக்கு 400 இடங்களை நாடாளுமன்றத்தில் கடக்க உதவும்.
பிரதமர் மோடி மீண்டும் பிரதமரானால் இட ஒதுக்கீட்டை ஒழித்து விடுவார் எனக் காங்கிரஸ் பொய்களைப் பரப்பி வருகிறது. ஆனால், பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டை வழிநடத்தி வருகிறார். அவர் எந்த இட ஒதுக்கீட்டையும் நிறுத்தவில்லை. இஸ்லாமியர்களுக்கு 4 சதவீதம் வழங்கி எஸ்சி, எஸ்டி, ஓபிசி இடஒதுக்கீட்டை பறித்தது காங்கிரஸ் கட்சிதான். பாஜக வெற்றி பெற்றால் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை உயர்த்துவோம். பிரதமர் மோடி, தான் சொல்வதையும் வாக்குறுதிகளையும் கடைப்பிடிக்கிறார். 70 ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டுவதை காங்கிரஸ் கட்சி நிறுத்தியது. வெறும் ஐந்தே ஆண்டுகளில், பிரதமர் மோடி வழக்கில் வெற்றி பெற்று, பூமி பூஜை செய்து, பிரான் பிரதிஷ்டை செய்தார். காஷ்மீரில் நமது கொடி என்றென்றும் பறக்கும் வகையில் 370வது சட்டப்பிரிவை பிரதமர் மோடி ரத்து செய்தார்” என்று கூறினார்.