கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகருக்கு உட்பட்ட ஹங்காலா கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் மற்றும் சுபா தம்பதியினர். இவர்களுக்குக் கடந்த ஆண்டு திருமணமான நிலையில் 6 மாதங்களுக்கு முன்னதாக ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்குக் காது குத்த முடிவு செய்த தம்பதியர் காதணி விழா நடத்தியுள்ளனர். முன்னதாக காது குத்துபோது குழந்தைக்குக் காது வலிக்காமல் இருப்பதற்காக மயக்க ஊசி போடத் திட்டமிட்டிருந்தனர்.
அதன்படி இதற்காக பொம்மலபுரா ஆரம்பச் சுகாதார மையத்தின் மருத்துவராக பணியாற்றும் நாகராஜ் என்பவர் குழந்தைக்கு இரு காதுகளிலும் மயக்க மருந்து (அனஸ்தீசியா) ஊசி செலுத்தியுள்ளார். இதற்காக மருத்துவர் ரூ. 200 கட்டணமாக வசூலித்துள்ளார். குழந்தைக்கு வீரியம் அதிகமான மயக்க ஊசியைப் போட்டதால் குழந்தையின் வாயில் இருந்து நுரை வந்துள்ளது. மேலும் அந்த சிறிது நேரத்தில் மயங்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து குழந்தையை மாவட்ட அரசு தலைமை மருந்துவமணைக்கு உடனடியாக அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். அதே சமயம் மருத்துவர் நாகராஜ் செலுத்திய ஊசியே குழந்தை மரணத்திற்குக் காரணம் என உறவினர்கள் குற்றம் சாட்டினர். அதனைத் தொடர்ந்து, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதோடு குழந்தையின் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். காது குத்துவதற்காக மயக்க ஊசி போட்டதில் குழந்தை பலியான சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.