Skip to main content

‘மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சினை உருவாகிவிடக் கூடாது’ - அரசு தரப்பு வாதம்!

Published on 04/02/2025 | Edited on 04/02/2025
Another Babri Masjid issue should not arise in Madurai Govt argument

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் மலையில் காசிவிஸ்வநாதர் கோவில் மற்றும் சிக்கந்தர் தர்கா அமைந்துள்ளது. இந்த இரண்டு புனிதத் தலங்களிலும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வழிபட்டு வருகின்றனர். இந்த நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு, கோழிகளைப் பலியிடப்பட்டு விழா நடத்தப்படும் தர்கா நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி திருப்பரங்குன்றத்துக்கு வந்த போது மலையில் அமர்ந்தபடி சிலர் அசைவ உணவுகளைச் சாப்பிட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படங்கள் பரவின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே, மலையின் புனிதம் கெட்டுவிட்டதாகக் கூறி இன்று (04.02.2025) போராட்டம் நடத்த இருப்பதாக இந்து அமைப்பினர் அறிவித்தனர். ஆனால், இந்து அமைப்பு மற்றும் அதன் ஆதரவு அமைப்பினர் நடத்த உள்ள போராட்டத்திற்கு, காவல்துறை அனுமதி மறுத்திருந்தது. இத்தகைய சூழலில் தான் மதுரை மாவட்ட ஆட்சியர், 2 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இது தொடர்பாக அவர் நேற்று (03.02.2025) வெளியிட்ட உத்தரவில் ‘இந்து மற்றும் இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இதனால், அசாதாரண சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மதுரை மாவட்டம் மற்றும் மாநகர் முழுவதும் காலை 6 மணி முதல் இரவு 12 மணி வரை  2 நாட்களுக்கு வெளியூர் நபர்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. பொது அமைதியைப் பாதுகாக்கும் விதமாகப் போராட்டங்கள், கூட்டங்கள், தர்ணாக்களுக்குத் தடை விதிக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது’ எனத் தெரிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் மதுரையில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரியும், இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டத்திற்கு யாரும் கலந்து கொள்ள வேண்டாம் என காவல்துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பை ரத்து செய்யக்கோரியும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (04.02.2025) விசாரணைக்கு வந்தது.

Another Babri Masjid issue should not arise in Madurai Govt argument

அப்போது அரசு தரப்பில், “விழாக்காலங்களில் இது போன்ற போராட்டங்களை அனுமதிக்க இயலாது. மதுரையில் மற்றொரு பாபர் மசூதி பிரச்சனை உருவாகி விடக்கூடாது. எனவே இதன் காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதோடு மேலும் 11ஆம் தேதி வரை விழாக்காலம் என்பதால் அதுவரை அனுமதி வழங்குவது கடினம்” என வாதிடப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “எங்கு எப்போது அனுமதி வழங்குகிறோம் என்பது குறித்து அரசிடம் உரியத் தகவலைப் பெற்றுத் தெரிவியுங்கள்” என அரசுத் தரப்புக்கு உத்தரவு விட்டார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கைப் பிற்பகலுக்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

சார்ந்த செய்திகள்