கடந்த 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரத்தின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த கரசேவகர்கள் 1700 பேர் அயோத்திக்கு ஆன்மீக பயணம் சென்றுவிட்டு மீண்டும் அங்கிருந்து அகமதாபாத் திரும்பி வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் பயணம் செய்துகொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில், குஜராத் மாநிலம் கோத்ரா ஸ்டேஷனுக்கு வந்து நின்றது. அப்போது கரசேவகர்கள் இருந்த ரயில் பெட்டி அருகே சிலர் கூட்டமாக நின்று கோஷம் எழுப்பியபடி இருந்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, எஸ் 6 பெட்டியில் தீ வைத்து கொளுத்தப்பட்டது. தீ வேகமாக அடுத்தடுத்த பெட்டிகளிலும் பற்றி எரியத் தொடங்கியது. இந்த சம்பவத்தில் 14 குழந்தைகள், 27 பெண்கள் என மொத்தம் 59 பேர் பலியானார்கள். இதனைத் தொடர்ந்து குஜராத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் ஏற்பட்டது. அந்த வகையில் பஞ்ச மஹால் மாவட்டம் கலோல், டெலோல் மற்றும் டெரோல் நிலையம் ஆகிய இடங்களில் வன்முறை ஏற்பட்டது.
இது தொடர்பான வழக்கில் 52 பேரை குஜராத் மாநில போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு பஞ்ச மஹால் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோதே வழக்கில் சம்பந்தப்பட்ட 17 பேர் உயிரிழந்தனர். மேலும் மீதி உள்ள 31 பேர் மீது தொடர்ந்து வழக்கு நடைபெற்றது. இதில், 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. மரண தண்டனை தீர்ப்பு பெற்ற சலீம் ஜர்தாவுக்கு, தண்டனை குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன்படி, சலீம் ஜர்தா குஜராத் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் பரோலில் வெளியே வந்த சலீம் ஜர்தா, தப்பியோடி தலைமறைவானார். இவரை குஜராத் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில், நாசிக் மற்றும் புனேவில் திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வந்த சலீம் ஜர்தாவை, திருட்டு வழக்கு ஒன்றில் நாசிக் போலீசாரும், சலீமை தேடி வந்துள்ளனர். அதன்படி, நாசிக்கில் நடந்த திருட்டு தொடர்பாக, சலீம் ஜர்தாவை நாசிக் போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர். அவரை விரைவில் சிறையில் அடைத்து விசாரிக்கப்படும் என்று போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.