அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறைத் தலைவர் மற்றும் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் முனைவர் கா காளிதாஸ் பேராசிரியர் சாலை கலையரசன் அரசு தொழிற்பயிற்சி மாணவர் வெள்ளையன் ஆகியோர் கொண்ட குழுவினர் காரையூர் - முள்ளிப்பட்டி நத்த காட்டில் வரலாற்றுக் கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, அங்குள்ள கண்மாய்க்கரையில் ராஜராஜன் காலத்துச் சிவன் கோயில் பாழடைந்த நிலையில் இருப்பதையும், தவ்வை , விநாயகர், ஐயனார் சிலைகள் இருப்பதையும் கண்டறிந்தனர். சிவன் கோயிலுக்கு அருகில் கல்வெட்டு ஒன்று இருப்பதைக் கண்டறிந்து அதைப் படி எடுத்தனர்.
இதுபற்றி காளிதாஸ் கூறியதாவது, "ஸ்வஸ்திஸ்ரீ திருமகள் போலப் பெருநிலச் செல்வியும், தனக்கே உரிமை பூண்டமை மனக்கொளக் காந்தளூர்ச் சாலைக் கலமறுத்தருளிய, செழியரை (பாண்டியரை) தேசுகொல் கோ இராஜகேசரி வன்மரான ஸ்ரீஇராஜராஜ தேவர்க்கு யாண்டு ய எ (கி.பி1016) ஒலியமங்கலம் ஒல்லையூர்க் கூற்றத்து ஆலத்தூர் நாடாழ்வார்க்குப் உறத்தூர்க்கூற்றத்துப் (மணற்பாறை - திண்டுக்கல்) *பழநி( முருகன்) கோயில்* நந்தவனத்திற்காக ஆசிரியம் விடப்பட்டு நிலங்களை எழுதி வைத்த செய்தி பொறிக்கப்பட்டுள்ளது என்றார். இது போன்ற தொன்மையான வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசாங்கமும் மக்களின் கடமையும்” என்றார்.