புலப்பெயர் தொழிலாளி ஒருவர் சாலையில் அமர்ந்து கதறி அழும் புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி பலரையும் மனமுருக வைத்தது. கடந்த இரண்டு நாட்களாக இந்தியாவில் பேசுபொருளாகியுள்ள இந்தப் புகைப்படம் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பாலத்தில் எடுக்கப்பட்டதாகும்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 38 வயதான ராம்பூகார் பண்டிட் தனது ஒரு வயது மகனின் இறப்பு செய்தியறிந்து, இறுதி ஊர்வலத்திற்குக் கூட செல்ல முடியாமல் கதறி அழுவதைப் படம்பிடித்தார் பி.டி.ஐ. செய்தியாளர் ஒருவர். அந்தப் புகைப்படமே இன்று நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பீகாரைச் சேர்ந்த ராம்பூகார் டெல்லியில் தங்கியிருந்து கட்டுமானத் தொழிலாளியாகப பணிபுரிந்து வந்துள்ளார். இவரது மனைவி மூன்று மகள்கள் மற்றும் ஆண் குழந்தை ஆகியோர் பீகாரில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில், ஊரடங்கால் வருமானம் இன்றி தவித்துவந்த ராம்பூகார், 1,200 கிலோமீட்டர் நடந்தே தனது சொந்த ஊருக்குச் செல்வதென முடிவெடுத்து நடைப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். ஆனால் போலீஸார், அவரது நடைப்பயணத்தைத் தடுத்ததால் வேறுவழியின்றி, நிஜாமுதீன் பாலத்திலேயே மூன்று நாட்களாகத் தங்கியிருந்துள்ளார்.
இந்தச் சூழலில் கடந்த சில நாட்களுக்குமுன் அவருக்கு வந்த செல்போன் அழைப்பில் அவரின் ஒரு வயது மகன் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தார் தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலைக் கேட்டுக் கதறித்துடித்த ராம்பூகார் தன்னை ஊருக்குச் செல்ல அனுமதிக்குமாறு காவல்துறையிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார். ஆனாலும் காவலர்கள் அவரை நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதிக்காத சூழலில், அவர் சாலையிலேயே அமர்ந்து கதறி அழுதுள்ளார். இந்தப் புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதனையடுத்து அவ்வழியாகச் சென்ற பி.டி.ஐ. செய்தியாளர், மற்றொருவரிடம் உதவி பெற்று ரூ. 5,500 செலுத்திச் சிறப்பு ரயிலில் ராம்பூகாரை பீகாருக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அங்குச் சென்றும் தனது குடும்பத்தைப் பார்க்க முடியாத வகையில் அரசால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் ராம்பூகார்.
இந்நிலையில் தனது சூழல் குறித்து தொலைபேசி மூலம் பேட்டியளித்த ராம்பூகார், "நாங்கெல்லாம் தொழிலாளர்கள். தொழிலாளர்களுக்கு வாழ்க்கை என்பதே இல்லை. கடைசி வரை வறுமை சக்கரத்தில் சிக்கி, சுழன்று இறந்துவிட வேண்டும். கடந்த சில நாட்களுக்கு முன் சொந்த ஊருக்குச்செல்ல முடியாத விரக்தியில் டெல்லி நிஜாமுதீன் பாலத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு வயதுகூட நிரம்பாத எனது மகன் இறந்துவிட்ட செய்தி எனக்குச் செய்தி வந்தது. நான் எனது குடும்பத்தைக் காணச்செல்லத் துடித்தேன். ஆனால் எனக்கு உதவ யாரும் இல்லாததால் கண்ணீர் விட்டு அழுதேன்.
என்னைச் சொந்த ஊருக்கு அனுப்பி வையுங்கள் என போலீஸாரிடம் சென்று மன்றாடினேன். ஆனால் உதவி கிடைக்கவில்லை. அதிலும் ஒரு காவலர், நீ சொந்த ஊருக்குச் சென்றால் உயிரிழந்த உன் மகன் உயிர்ப்பிழைத்து வந்துவிடுவானா. இது லாக்டவுன். நீ எங்கும் செல்ல முடியாது எனத் தெரிவித்தார். அப்போது அந்த வழியாகச் சென்ற ஒரு பத்திரிகையாளர், நான் அழுவதைப் பார்த்து என்னை அவர் வாகனத்தில் அழைத்துச் செல்ல முயன்றார். ஆனால், அதற்குக்கூட போலீஸார் அனுமதிக்கவில்லை. பின்னர் அந்தப் பத்திரிகையாளர் யாரிடமோ பேசி எனக்கு உணவு, ரூ.5500 பணம் கொடுத்துச் சிறப்பு ரயிலில் சீட்டு முன்பதிவு செய்து என்னைச் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார்.
பணக்காரர்களுக்கு அனைத்து உதவிகளும் கிடைத்துவிடும். அவர்களைக் காப்பாற்ற வெளிநாடுகளில் இருந்து விமானத்தில் கூட அழைத்து வருவார்கள். ஆனால் ஏழை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கண்டுகொள்ளாமல் விடப்படுவார்கள். இதுதான் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கைக்கான மதிப்பு.
என் மகனுக்கு ஆசையாக என் பெயரையும் சேர்த்து ராம்பிரகாஷ் என்று பெயர் வைத்தேன். மகனின் இறுதிச்சடங்கிற்கு எந்த அப்பாவாவது போகாமல் இருக்க முடியுமா, குடும்பத்தாருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள ஒரு தந்தை விரும்பமாட்டாரா?
நான் பெகுசாரி கிராமத்துக்கு இரு நாட்களுக்கு முன்புதான் வந்து சேர்ந்தேன். தற்போது பெகுசாரி நகரில் உள்ள பள்ளிக்கூடத்தில் தனிமை முகாமில் இருக்கிறேன் எப்போது எனது குடும்பத்தினரைச் சந்திப்பேன் என எனக்குத் தெரியாது. எனது மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார், எனது மகள்கள் எனக்காகக் காத்திருக்கிறார்கள். இந்தக் காத்திருப்பு முடிவதுபோல் தெரியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.