
உலக அளவில் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான ஐ.பி.எல். டி20 தொடர் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2025ஆம் ஆண்டுக்கான 18வது சீசன் மார்ச் மாதம் முதல் மே மாதம் வரை ஐ.பி.எல் போட்டி நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான மெகா ஏலம், கடந்தாண்டு நவம்பர் மாதம் சவுதி அரேபியாவில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டியின் அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த சீசனில் 13 மைதானங்களில் 74 போட்டிகள் நடைபெற உள்ளது.
அதன்படி, மார்ச் 22ஆம் தேதி அன்று தொடங்கி இறுதிப் போட்டி மே 25 அன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மார்ச் 22ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன. அதனை தொடர்ந்து, மார்ச் 23ஆம் தேதி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணி ஆகிய அணிகள் ஹைதராபாத்தில் மோதவிருக்கிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள், சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன. மார்ச் 23, 28, 30, ஏப்ரல் 5, 8, 11, 14, 20, 25, 30 மற்றும் மே 3, 7, 12, 16 ஆகிய தேதிகளின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் விளையாட இருக்கிறது.
முதல் குவாலிஃபயர் போட்டி, மே 20 அன்றும், எலிமினேட்டர் போட்டி மே 21 அன்று ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. 2ஆம் குவாலிஃபர் போட்டி மே 23ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இந்த சீசனின் இறுதிப் போட்டி கொல்கத்தாவில் மே 25ஆம் தேதி நடைபெற உள்ளது.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளைக் காண வரும் ரசிகர்கள் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டை காண்பித்து சென்னை மாநகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் எனச் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சலுகை, போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே செல்லும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இதேபோன்ற அறிவிப்பை சென்னை மெட்ரோ நிர்வாகமும் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே போட்டி நடைபெறும் அனைத்து நாட்களும் மெட்ரோ ரயில்கள் நள்ளிரவு ஒரு மணிவரை இயங்கும். போட்டியை காண செல்வோர் ஐபிஎல் டிக்கெட்களை காட்டிவிட்டு இலவசமாக பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.