பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் கடந்த வாரம் நடப்பதாக இருந்தது. அப்போது உடல் நலம் பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த முன்னாள் பிரதமரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாய் மரணம் அடைந்தார். இதனால், பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட பாரதிய ஜனதா செயற்குழு கூட்டம் செப்டம்பர் 8, 9-ந்தேதிகளில் 2 நாட்கள் டெல்லியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில், மறைந்த வாஜ்பாய் அவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மத்திய பாஜக ஆட்சியின் சாதனைகள் மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்படும். நாடாளுமன்றத் தேர்தலுக்கான வியூகங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என்று தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் தெரிவித்துள்ளார்.