இந்தியாவில் கரோனா இரண்டாவது அலையின் தாக்கம் மெல்ல குறைந்து வருகிறது. அதேநேரத்தில் மூன்றாவது அலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்நிலையில் கரோனா மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது என எச்சரித்துள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு, மூன்றாவது அலையின் தாக்கத்தைத் தவிர்ப்பதற்கு வழிமுறைகளையும் கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய மருத்துவ கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய சான்றுகளையும், எந்தவொரு தொற்றுநோய்களின் வரலாற்றினையும் வைத்துப் பார்க்கையில் மூன்றாவது அலை தவிர்க்க முடியாதது. மேலும், உடனடியாக ஏற்படக்கூடியது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசாங்கங்களும் மக்களும் அலட்சியமாக உள்ளனர். கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாமல் கூட்டமாகக் கூடுகிறார்கள். இது பார்ப்பதற்கு வேதனை அளிக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து, "சுற்றுலா, புனித யாத்திரை போன்ற அனைத்தும் தேவைதான். ஆனால், இவையெல்லாம் இன்னும் சில மாதங்கள் காத்திருக்க முடியும். இவற்றின் மூலம், தடுப்பூசி செலுத்திக்கொள்ளா மக்கள் பெருந்திரளாகக் கூட்டத்தில் தங்குதடையின்றி கலந்துகொள்வது கரோனா மூன்றாவது அலைக்கான சூப்பர்-ஸ்ப்ரேட்டரை (SUPER -SPREADER) உருவாக்க வாய்ப்புள்ளது" என இந்திய மருத்துவ கூட்டமைப்பு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
மேலும், "தற்போது கரோனா பாதுகாப்பு நடைமுறைகளில் தளர்வுகள் செய்து நாம் பெறக்கூடிய சிறிய பொருளாதார லாபங்களை மொத்தமாக மிருகத்தனமான மூன்றாவது அலை அழித்துவிடும்" எனத் தெரிவித்துள்ள இந்திய மருத்துவ கூட்டமைப்பு, "தடுப்பூசி செலுத்துவதை அதிகப்படுத்துவதன் மூலமும், கரோனா விதிமுறைகளை மூன்று மாதங்களுக்குக் கடுமையாகப் பின்பற்றுவதன் மூலமும் கரோனா மூன்றாவது அலையின் தாக்கத்தைக் குறைக்க முடியும்" எனவும் கூறியுள்ளது.