அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியில் பிரச்சினைக்கு உரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்ற விவகாரத்தில் இன்னும் இறுதி தீர்வு ஏற்படவில்லை. இது தொடர்பான வழக்குகள், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வின் முன் நிலுவையில் இருந்து வருகின்றன.
இந்நிலையில், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று அயோத்தி சென்று ராமர் ஜென்ம பூமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசுகையில், ராமர் இந்த உலகத்திற்கே கடவுள் போன்றவர். அயோத்தி ராமரது ஆசீர்வாதத்தை பெற்றுள்ளதால் இங்கு தான் ராமர் கோவில் அமையும். அதில் எந்த வித சந்தேகமும் இல்லை என கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, ஒரு புறம் சில மூத்த தலைவர்கள் உச்சநீதிமன்றம் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு ராமர் கோவில் பிரச்சினைக்கு தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறுகின்றனர். சில காங்கிரஸ் தலைவர்கள் பாஜக அரசு அயோத்தி பிரச்சினையில் எதுவும் செய்யவில்லை எனக் கூறுகின்றனர். பிரச்சினை ஒரு தீர்வை நோக்கி செல்லும் போது இவர்கள் சதி செய்ய நினைக்கிறார்கள் என அவர் கூறியுள்ளார்.