பா.ஜ.க வின் மூத்த தலைவரும், மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சருமான நிதின் கட்கரி இரண்டு நாட்களுக்கு முன் கட்சி தலைமை குறித்து கூறியிருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்பொழுது மீண்டும் அதே போன்ற கருத்து ஒன்றை கூறியுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு பேசிய அவர், கட்சியின் வெற்றிக்கு எப்படி கட்சி தலைவர்கள் பொறுப்பேற்றுக் கொள்கின்றனரோ, அதே போல தோல்விகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என கூறினார். இது பாஜக கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று புலனாய்வு துறையின் சார்பில் நடைபெற்ற ஒரு விழாவில் பேசிய அவர், 'ஒரு கட்சின் எம்.எல்.ஏ மற்றும் எம்.பி க்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் அதற்கான பொறுப்பை அந்த கட்சியும், கட்சி தலைவரும் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும், மேலும் உள்துறை இன்று சரியாக நடக்கிறதென்றால் அதற்கு சரியான பயிற்சியுள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் ஆதிகாரிகள் இருப்பதனால் தான்' என கூறினார். இந்த சம்பவங்கள் மூலம் பாஜக வில் உள்கட்சி குழப்பம் நிலவுவது வெளியே தெரியவந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் இதுகுறித்து தெரிவித்து வருகின்றனர்.