சேவ் கேரளா என்ற திட்டத்தின் கீழ் கேரளா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விதிகளை நடைமுறைப்படுத்த சாலைகள் முழுவதும் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டன. தலைக்கவசம் அணியாமல் சாலைகளில் பயணிப்போர், அதிவேகமாகச் செல்வோருக்கு அபராதம் விதிப்பதே சேவ் கேரளா திட்டத்தின் நோக்கமாகும்.
இந்நிலையில் இடுக்கியைச் சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி ஸ்கூட்டரில் பெண் ஒருவருடன் திருவனந்தபுரத்திற்குச் சென்றுள்ளார். அந்த பயணத்தில் அவர் தலைக்கவசம் அணியவில்லை எனக் கூறப்படுகிறது. இருவரும் சென்ற புகைப்படம் சாலைப் பாதுகாப்பு கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் வண்டியின் உரிமையாளர் ஓட்டிச் சென்றவரின் மனைவி என்பதால் அவருக்கும் இது குறுஞ்செய்தியாகச் சென்றுள்ளது.
குறுஞ்செய்தியில் தலைக்கவசம் அணியாமல் பயணித்தற்காக அபராதம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. தனது கணவன் வேறொரு பெண்ணுடன் இருசக்கர வாகனத்தில் சென்றது புகைப்படங்களாக மனைவியின் கைப்பேசிக்கு வந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி கணவரிடம், உடன் வந்த பெண்மணி யார் என்று கேள்விகளை எழுப்பிய நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதங்கள் எழுந்துள்ளது.
அந்த பெண் யாரென்று தனக்குத் தெரியாது என்றும் வாகனத்தில் லிஃப்ட் கேட்டதால் உடன் அழைத்துச் சென்றேன் என்றும் கணவன் கூறியுள்ளார். தொடர்ந்து மனைவி சண்டையிட்டுள்ளார். இதனால் கோபமடைந்த கணவன் தனது மனைவியையும் 3 வயது குழந்தையும் தாக்கியுள்ளார் எனவும் இதன் காரணமாக கணவர் மீது மனைவி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர் அவர் மீது ஐபிசி 321, 341, 294 மற்றும் 75 என 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை சிறையில் அடைத்தனர்.