செங்கல்பட்டு மாவட்டம் பண்டிதமேடு பகுதி ஓஎம்ஆர் சாலையில் கார் மோதி 5 பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
திருப்போரூரில் இருந்து மாமல்லபுரம் செல்லக்கூடிய ஓஎம்ஆர் சாலையில் பண்டிதமேடு பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த ஐந்து பெண்கள் கால்நடை மேச்சலுக்காக சென்றுள்ளனர். மேய்ச்சலுக்கு பின் சாலையின் இடதுபுறம் உள்ள புல்தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது அதிவேகத்தில் வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள் மீது மோதியுள்ளது.
இதில் உணவு அருந்திக் கொண்டிருந்த ஐந்து பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய காரில் இருந்தவர்களை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிடிக்க முயன்றனர். இதில் மூன்று பேர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்று விட்டனர். இரண்டு பேர் மட்டுமே சிக்கினர். அவர்களை அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கினர். உடனடியாக அங்கு வந்த போலீசார் விபத்தில் உயிரிழந்த பெண்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. விபத்து ஏற்படுத்தியவர்கள் அருகிலேயே உள்ள கல்லூரியில் பயின்று வந்த மாணவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசாரின் தொடர் விசாரணையில் விபத்து ஏற்படுத்திய காரை சித்தலபாக்கத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஜோஸ்வா என்ற இளைஞர் ஓட்டி வந்தது தெரிய வந்துள்ளது. பெருங்குடியைச் சேர்ந்த தாஹித் அஹமது (19), ஜோஸ்வா(19) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழந்த பெண்களின் குடும்பங்களுக்கு தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்து உத்தரவு வெளியிட்டுள்ளார்.