மஹாராஷ்டிராவில் அரசியல் குழப்பங்கள் தீர்ந்து சிவசேனா தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைத்தால் சுப்ரியா சூலேவுக்கு மத்திய அமைச்சர் பதவி தர தயாராக இருந்ததாக சரத் பவார் கூறியுள்ளது, பாஜகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த சரத் பவார், மஹாராஷ்டிராவில் நடந்த குழப்பங்கள் பற்றி பகிர்ந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "பிரதமர் மோடியை சந்திக்க நான் அவகாசம் கேட்டேன். ஆனால் பல்வேறு இழுபறிகளுக்கு பிறகு கடைசி நேரத்தில் அவரை சந்திக்க நேரம் கிடைத்தது. அப்போது விவசாயிகளின் பிரச்சனைகள் குறித்து நாங்கள் விவாதித்தோம். இறுதியில் பிரதமர் மோடி ஒரு திட்டத்தை முன்வைத்தார்.
மகாராஷ்டிராவில் நாங்கள் ஒன்றாக வேலை செய்ய முடிந்தால் நல்லது. மகாராஷ்டிராவில் பாஜகவும் என்சிபியும் ஒன்று சேர வேண்டும் என்று அவர் விரும்பினார். நான் இந்த திட்டத்தை தெளிவாக மறுத்துவிட்டேன். அதேபோல எனது மக்கள் சுப்ரியா சூலேவுக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கான வாய்ப்பும் இருந்தது" என தெரிவித்தார். சரத் பவாரின் இந்த பேச்சு தற்போது தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.