Skip to main content

அமேதி தொகுதியில் மீண்டும் போட்டி?; மெளனம் கலைத்த ராகுல் காந்தி

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Rahul Gandhi broke the silence and answered Re-contest in Amethi constituency?

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும், புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலுக்காக காங்கிரஸ், கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜ.க கட்சி வேட்பாளர்கள், வேட்புமனு தாக்கல் செய்தனர். அந்த வகையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரளா மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிடுவதற்காக நேற்று (03-04-24) வேட்புமனு தாக்கல் செய்தார்.

ராகுல் காந்தி கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவாரா? என்று கேள்வி் பலரிடம் இருந்தும் எழுந்து வருகின்றது. அதே நேரத்தில், அமேதி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெயரை வெளியிடாமல் காங்கிரஸ் தொடர்ந்து மெளனம் காத்து வருகிறது. .

இதற்கிடையில், அமேதி தொகுதியில் போட்டியிட விரும்புவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா விருப்பம் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், அமேதி தொகுதியில் மீண்டும் போட்டியிடுவது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி பதில் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம், காசியாபாத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கூட்டாக சேர்ந்து நேற்று (17-04-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினர். அப்போது, ராகுல் காந்தியிடம், அமேதி தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, “இது பாஜகவின் கேள்வி, மிகவும் நல்லது. கட்சித் தலைமையிடம் இருந்து எனக்கு எந்த உத்தரவு வந்தாலும் அதை நான் பின்பற்றுவேன். எங்கள் கட்சியில், இந்த வேட்பாளர்களின் தேர்வு முடிவுகள் அனைத்தும் காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டத்தில் எடுக்கப்படுகின்றன” என்று கூறினார்.

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியிலும், கேரள மாநிலம் வயநாடு தொகுதியிலும் ராகுல் காந்தி போட்டியிட்டார். இதில், அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணியிடம் தோல்வி அடைந்தார். அதே நேரம் வயநாடு தொகுதியில் அதிகபட்ச வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்