புதுச்சேரி பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில், அம்மாநில பா.ஜ.க தலைவரும், நியமன எம்.எல்.ஏ.வுமான சாமிநாதன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றதால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ப்புக்கு பா.ஜ.க. காரணம் அல்ல. தானாக கவிழ்ந்த அரசுக்கு நாங்கள் காரணம் அல்ல. மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும், ஆட்சி கவிழ்ந்ததற்கும் சம்பந்தம் இல்லை. வாக்கெடுப்பு நடத்தாமல் நியமன சட்டமன்ற உறுப்பினர்கள் மீது குற்றம்சாட்டுவது தவறு.
புதுச்சேரியில் பலமுறை ஆட்சிக் கவிழ்ப்புக்கு காரணமாக காங்கிரஸ் இருந்துள்ளது. புதுச்சேரியில் பா.ஜ.க.விற்கு ஆட்சி அமைக்கக் கோரும் விருப்பம் இல்லை. குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இல்லை. ஒருபோதும் நாங்கள் ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமைக் கோர மாட்டோம். 2021 சட்டமன்றத் தேர்தலை பா.ஜ.க. நேர்மையாக எதிர்கொள்ளும்" என்றார்.
அதேபோல் புதுச்சேரி சட்டப்பேரவையின் அ.தி.மு.க.வின் சட்டமன்றக் குழு தலைவர் அன்பழகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, "புதுச்சேரியில் தானாக முன்வந்து நாராயணசாமி பதவி விலகவில்லை. ஏழு எம்.எல்.ஏக்கள் பதவி விலகியும், பதவி மோகத்தால் நாராயணசாமி வெளியேறவில்லை. எதிர்க்கட்சிகள் ஆட்சியைக் கவிழ்க்கவில்லை. எதிர்க்கட்சிகளைக் குறை சொல்ல ஸ்டாலினுக்கும், நாராயணசாமிக்கும் தகுதியில்லை. குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க அ.தி.மு.க. விரும்பாது. அதில் நம்பிக்கை இல்லை. ஆளுவதற்கு தகுதியில்லாததால் அவரே ஆட்சியை இழந்தார்" என்றார்.