அதிகாரத்திற்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவர்களின் வலியைக் கட்டுரை மூலமாகவும், தனது பேச்சின் மூலமாகவும் அருந்ததி ராய் என்ற எழுத்தாளர் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்காகக் கொடுக்கப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘புக்கர் விருது’ கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அருந்ததி ராய் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த மாநாட்டில் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.
இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும் ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இதனிடையே, இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.
எழுத்தாளர் அருந்ததி ராய் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததன் மூலம் அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால், அதுதான் இல்லை. அவர்கள் முன்பு இருந்ததைப் போல ஒருபோதும் திரும்பி வர முடியாது. இந்தப் பாசிசத்திற்கு எதிராகத்தான் இந்தியர்கள் வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.