தொலைத்தொடர்பு துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்ந்து வரும் ஜியோ நிறுவனம், அடுத்ததாக மின்னணு வணிகத்தில் களமிறங்கியுள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது. இந்த சூழலில் தற்போது E-Commerce எனப்படும் மின்னணு வணிகத்தில் களமிறங்க உள்ளது. ஆன்லைன் மூலம் பலசரக்கு வணிகத்தில் ஜியோ ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. BigBasket, Grofers, dunzo போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே இந்த துறையில் உள்ள நிலையில், தற்போது Jio Mart என்ற பெயரில் ஜியோ நிறுவனம் இந்த துறையில் நுழைய உள்ளது.
மகாராஷ்டிராவின் நவி மும்பை, தானே மற்றும் கல்யான் பகுதிகளில் செயல்பட தொடங்கியுள்ள இந்த சேவை, படிப்படியாக நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50,000க்கும் அதிகமான வகைகளில் மளிகை பொருட்கள் கிடைக்கும் எனவும், டெலிவரி இலவசம் என்றும் ஆர்டர்களுக்கான குறைந்தபட்ச தொகை எதுவும் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்வியே இல்லாமல் பொருட்கள் திரும்பப்பெறப்படுமெனவும் கூறப்பட்டுள்ளது. ஜியோவின் இந்த புதிய திட்டம் வாடிக்கையாளர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.