இந்தியா முழுவதும் கடந்த மூன்று மாதங்களாக மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நடைப்பெற்று வந்த நிலையில் கடைசிக் கட்டத் தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி , அகில இந்திய பாஜக தலைவர் அமித்ஷா, அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் நேற்று மாலை செய்தியாளர்களை சந்தித்து தங்களது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தனர். பின்பு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் உத்தரகாண்ட் மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றார்.
அந்த மாநிலத்தில் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் , இமயமலையில் புகழ் பெற்ற கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கேதார்நாத் கோயில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 11,755 அடி உயரத்தில் உள்ளது. நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலிற்கு வந்து தரிசனம் செய்கின்றனர். உத்தரகாண்ட மாநிலத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை கேதார்நாத் கோவிலுக்கு சென்று தரிசனம் மேற்கொண்டார். இதனால் கேதார்நாத் கோவில் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் தங்கும் பிரதமர்மோடி நாளை பத்ரிநாத் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். இந்த இரு கோவில்களும் ஆறு மாத குளிர்காலங்களுக்கு பிறகு சமீபத்தில் கோவில் நடை திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு , தீவிர கண்காணிப்பை ராணுவம் மேற்கொண்டுள்ளது. பிரதமரை தொடர்ந்து பாஜகவின் தேசிய தலைவர் அமித்ஷா இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள சோம்நாத் கோவிலில் சிறப்பு பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.