டெல்லியில் கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி தனது ஆண் நண்பருடன் பேருந்தில் சென்று கொண்டிருந்த மருத்துவ மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. டெல்லியில் நிகழ்ந்த இந்த வன்கொடுமையைக் கேள்விப்பட்டு ஒட்டுமொத்த தேசமும் அதிர்ச்சியில் உறைந்தது. சுமார் ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிர்பயா குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய், பவன், அக்ஷய் சிங்கிற்கு டெல்லி திஹார் சிறையில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் தேதி (20/03/2020) தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இதேபோன்ற கொடூரச் சம்பவம் ஒன்று உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர். கடந்த 9 மற்றும் 10 ஆம் தேதி இரவு, உத்தரப் பிரதேசத்தில் இருந்து ஜெய்ப்பூருக்கு தனியார் பேருந்து சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது கான்பூரில் இருந்து ஜெய்ப்பூருக்கு 20 வயது தலித் பெண் ஒருவர் பயணித்துள்ளார். இவர் பேருந்தில் தனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் அமர்ந்திருந்துள்ளார். பேருந்திற்குள் சில பயணிகளும் இருந்துள்ளனர். அந்த சமயம் இந்த கேபினுக்குள் ஆரிப் மற்றும் லலித் என அடையாளம் காணப்பட்ட டிரைவர்கள், ஓடும் பேருந்தில் அந்த பெண்னை இரண்டு டிரைவர்களும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தபோது பெண் கூச்சலிட்டதால் பேருந்து உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட லலித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். ஆரிப்பை பேருந்தில் இருந்த பயணிகள் பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். இதனையடுத்து ஆரிஃப் தற்போது நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தப்பியோடிய லலித்தை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர் எனப் போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.