நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் (09.06.2024) நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாகக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்களும், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் பிரதமர் மோடி தலைமையில் 72 பேர் கொண்ட அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அதில் 30 கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய 5 இணையமைச்சர்கள் மற்றும் 36 இணையமைச்சர்கள் பதவி ஏற்றனர். இதனையடுத்து மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் அதிகாரப்பூர்வமாக நேற்று (10.06.2024) அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் பிரதமர் மோடி சமூக வலைத்தளத்தில் பாஜகவினரின் பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டிருப்பதை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக மோடியின் குடும்பம் (Modi Ka Parivar - மோடி கா பரிவார்) என சேர்த்தனர். அதிலிருந்து நான் நிறைய பலம் பெற்றேன். இந்திய மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குத் தொடர்ந்து மூன்றாவது முறையாகப் பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனையாகும். மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காகத் தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்படத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகப் பக்கத்தில் இருந்து மோடியின் குடும்பம் என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். காட்சிப் பெயர் மாறலாம், ஆனால் இந்தியாவின் முன்னேற்றத்திற்காகப் பாடுபடும் ஒரு குடும்பம் என்ற நமது பிணைப்பு வலுவாகவும் உடைக்கப்படாமலும் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக பீகார் மாநில முன்னாள் முதல்வரான லாலு பிரசாத் யாதவ் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது ‘பிரதமர் மோடிக்கு குடும்பம் இல்லை’ எனத் தெரிவித்திருந்தார். இதனையடுத்து பாஜக தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைத்தளத்தில் தளத்தில் தங்களது பெயருக்குப் பின்னால் ‘மோடியின் குடும்பம்’ எனக் குறிப்பிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.