இந்த ஆண்டிற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த மாதம் 31 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடரான பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான கடந்த 31 ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. இதனையடுத்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் நாளான கடந்த 1 ஆம் தேதி மத்திய அரசின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்துக்கு பிரதமர் மோடி கடந்த 7 ஆம் தேதி மாநிலங்களவையில் பதிலளித்துப் பேசினார். இதனையடுத்து மாநிலங்களைவில் நேற்று (08-02-24) பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர், மாநிலங்களவையில் பதவிக்காலம் முடிந்து ஓய்வு பெறும் எம்.பி.க்களுக்கு பிரியாவிடை அளித்துப் பேசினார்.
இந்த நிலையில், நாடாளுமன்ற கேண்டீனில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி இன்று (09-02-24) மதிய உணவு சாப்பிட்டார். அதில், பிஜேடி தலைவர் சஸ்மித் பத்ரா, ஆர்.எஸ்.பி தலைவர் என்.கே. பிரேம சந்திரன், பி.எஸ்.பி.யின் ரித்தேஷ் பாண்டே, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் உடன் இருந்தனர்.