பூங்காவில் இருந்து தப்பித்து வந்த முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைக்க பொதுமக்கள் பணம் கேட்ட சம்பவம் உ.பி-யில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூரி மாவட்டத்தில் துத்வா என்ற புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு புலிகளைத் தவிர பல்வேறு வகையான காட்டு மிருகங்கள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அங்கு கடுமையான மழை பெய்தது. இதனால் முதலை ஒன்று தண்ணீரின் அருகில் இருந்த கிராமத்திற்கு தப்பிச் சென்றது. இதனை அறிந்த வனத்துறையினர் முதலையைப் பிடிக்க அந்த கிராமத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள் முதலையைக் கயிறுபோட்டு பிடித்து வைத்திருந்த கிராம மக்கள் 50 ஆயிரம் கொடுத்தால் தான் முதலையை தருவோம் என்று கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் முதலையைக் கொடுக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். இதனையடுத்து கிராம மக்கள் முதலையை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.