
இந்தியர்கள் அனைவருக்கும் டிஜிட்டல் சுகாதார அட்டை வழங்கும் வகையில் (ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல்) திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி துவங்கிவைத்தார். கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது, தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் குறித்த அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டிருந்தார். மக்கள் தங்களின் மருத்துவ தகவல்களை சேகரித்து வைத்துக்கொள்ளும் வகையில் டிஜிட்டல் சுகாதார அடையாள அட்டை வழங்கப்படும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி, நேற்று (27.09.2021) ஆயூஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தை பிரதமர் மோடி டெல்லியில் தொடங்கிவைத்தார். முதலில் 6 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே சோதனை அடிப்படையில் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
தற்போது இந்த திட்டம் நாடு முழுவதும் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்படும். ஒவ்வொரு இந்தியருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டை வழங்கப்படும். பரிசோதனைகள், நோய் குறித்த விவரம், சந்தித்த மருத்துவர்கள், எடுத்துக்கொண்ட மருந்துகள் மற்றும் நோயறிதல் குறித்த தகவல்கள் ஆகியவை ஐடியில் சேகரிக்கப்படும். ஒருவேளை நோயாளி, ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலத்திற்குச் சென்றாலும் இந்த அட்டை மூலம் அவர் புதிய மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது எளிதாகும். இதேபோல், நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது என்பது மருத்துவமனைகளுக்கும் மருத்துவர்களுக்கும் எளிதாகும். ஆதார் மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களைக் கொண்டு உருவாக்கப்படும் சுகாதார அடையாள அட்டை ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண்ணை வழங்கும்.
சுகாதார அடையாள எண், டிஜி மருத்துவர், தொலைதூர மருத்துவம், மின்-மருந்தகம், சுகாதார சேவைப் பதிவகம், டிஜிட்டல் முறையில் சேமிக்கப்பட்ட தனிப்பட்ட மருத்துவக் கோப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக தேசிய டிஜிட்டல் சுகாதார இயக்கம் இருக்கும். இதனை துவங்கிவைத்து பேசிய பிரதமர் மோடி, “ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் உள்ள தடைகளைக் களைய இந்த திட்டம் முக்கியப் பங்காற்றும் என்று கூறினார். மேலும், 130 கோடி ஆதார் ஐடிகள், 118 கோடி மொபைல் சந்தாதாரர்கள், சுமார் 80 கோடி இணைய பயனர்கள் மற்றும் 43 கோடி ஜன் தன் வங்கி கணக்குகள் - இவ்வளவு பெரிய, இணைக்கப்பட்ட உள்கட்டமைப்பை உலகில் வேறு எங்கும் காண முடியாது” என்று இந்தியாவின் வளர்ச்சி குறித்து பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.