இந்தியா சார்பில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை இன்று (02-09-23) காலை 11.50 மணிக்கு இஸ்ரோ விண்ணுக்கு அனுப்ப உள்ளது. ஆந்திரா மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் மூலம் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட உள்ளது.
விண்ணில் பாயத் தாயாராக இருக்கும் ஆதித்யா எல்1 விண்கலத்தின் கவுண்டவுன் நேற்று (01-09-23) காலை 11.50 மணிக்குத் தொடங்கியது. சூரியனை ஆய்வு செய்ய பி.எஸ்.எல்.வி. சி57 ராக்கெட் சுமந்து செல்லும் ஆதித்யா எல்-1 விண்கலம் 1,475 கிலோ எடை கொண்டது. பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ. தூரம் கொண்ட சூரியனின் லெக்ராஞ்சியன் புள்ளி 1-இல் நிலைநிறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாட்டின், தென்காசி மாவட்டம், செங்கோட்டை கலைமான் நபி பள்ளிவாசல் ஜமாத் பகுதியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானியான நிகர் ஷாஜி சூரியனை ஆய்வு செய்வதற்காக விண்ணில் ஏவப்படும் ஆதித்யா எல்-1 விண்கலத்தின் திட்ட இயக்குநராக உள்ளார்.
மொத்தம் ஏழு உபகரணங்களோடு விண்ணிற்குச் செல்லும் இந்த விண்கலம், சூரியனின் வெளிப்புற அடுக்குகளை ஆய்வு செய்யவுள்ளது. இதன் மூலம், சூரியனின் வெப்பம், காந்த துகள்கள் வெளியேற்றம், விண்வெளியின் காலநிலை, விண்வெளியில் உள்ள துகள்கள் ஆகியவற்றை இந்த ஆதித்யா எல்-1 ஆய்வு செய்யவுள்ளது.
பல்வேறு நாடுகள் சூரியனை ஆய்வு செய்ய விண்கலன்களைச் செலுத்தியுள்ள நிலையில், இந்தியா முதல் முறையாக சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ இன்று விண்ணில் செலுத்துகிறது.
முன்னதாக உலகிலேயே முதல் நாடாக நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட சந்திரயான் 3 வெற்றிகரமாகத் தனது ஆய்வுகளை நடத்தி வருகிறது. இந்நிலையில், இந்தியா சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1-ஐ அனுப்பி அடுத்த சாதனையை நிகழ்த்த தயாராகியுள்ளது.
இஸ்ரோவில் இருந்து ராக்கெட் செல்வதை அங்கு அமைக்கப்பட்டுள்ள கேலரியில் அமர்ந்து மக்கள் பார்க்கக்கூடிய வசதி உள்ளது. இந்நிலையில், ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை நேரில் காண்பதற்காகக் கடந்த 29ம் தேதி இஸ்ரோ முன்பதிவைத் துவங்கியது. இந்த முன்பதிவு துவங்கிய ஏழே நிமிடங்களில் மொத்த இருக்கையும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 10,000 பேர் ஆதித்யா எல்-1 விண்ணில் பாய்வதை நேரில் காண்பதற்காக அங்கு குழுமியுள்ளனர்.