
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் ஒருவர் கரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கரோனா ஊரடங்கு நேரத்தில் இந்தியாவில் பெரிய கோயில்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. 6ஆம் கட்ட ஊரடங்கின் போது அளிக்கப்பட்ட சில தளர்வுகளின் அடிப்படையில் சில கோயில்கள் திறக்கப்பட்டது. ஆனால் பெரிய கோயில்கள் திறப்பது பற்றி மத்திய அரசு இதுவரை எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை. சமூக இடைவெளி கேள்விக்குறியாகும் என்பதால் இந்தியாவில் பல கோயில்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் திறக்கப்பட்டது. தினமும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். ஒரு நாளைக்கு தற்போது 6,000 வரையிலான பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் அது தற்போது 12,500 ஆக அதிகரித்துள்ளது. தரிசனம் மீண்டும் தொடங்கப்பட்டு ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் இதுவரை 2,63,000 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், அங்கு பணியாற்றும் அர்ச்சகர்கள் 15 பேருக்குக் கரோனா தொற்று சில நாட்களுக்கு முன்பு உறுதியானது. இதற்கிடையே இன்று பிரதான அர்ச்சகரான சீனிவாச மூர்த்தி (75) கரோனா பாதிப்பால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.