![Chandrababu Naidu arrested Tension in Andhra Pradesh](http://image.nakkheeran.in/cdn/farfuture/b777aWAzUV4HPROtHaf1oU3X1htEzq3YZlKzagRl3nE/1694229724/sites/default/files/inline-images/chandra-babu-naidu-arrested_0.jpg)
ஆந்திரா முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர முதலமைச்சராக இருந்தபோது திறன் மேம்பாட்டுக் கழகத்தில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. இந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு வீட்டிற்குச் சென்ற மாநில சிஐடி காவல்துறையினர் அவரிடம் கைது செய்வதற்கான கைது வாரண்ட்டை வழங்கினர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட சந்திரபாபு நாயுடு, நந்தியாலா பகுதியில் இருந்து விஜயவாடா சிறைக்கு கொண்டு செல்லப்படுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2021 ஆம் ஆண்டு பதிவான இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு அதிகமாக இருப்பதால் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து ஆந்திரா மாநிலம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மேலும் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுப்பதற்காக போலீசார் பேருந்துகளை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். தமிழகத்தின் வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட பிற பகுதிகளில் இருந்து ஆந்திரா செல்லும் பேருந்துகள் இரு மாநில எல்லைகளிலேயே நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகவும் அவதியடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற பக்தர்கள் தமிழகம் திரும்புவதற்கு பேருந்துகள் இன்றி தவித்து வருகின்றனர்.
சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் திருப்பதியில் உள்ள சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.