நாடு முழுவதும் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. இதனால், பல வகைகளில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதுடன், மக்கள் மத்தியில் பீதியையும் உருவாக்கியுள்ளது. விமான நிலையங்களுக்கு போலி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கும் நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில், முதற்கட்ட விசாரணையில், விமான நிலையங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் ஜக்தீஷ் உய்கே (35) என்பது தெரியவந்தது. அதன்படி, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள கோண்டியா பகுதியைச் சேர்ந்த ஜக்தீஷ் உய்கேவை போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், விமானங்களுக்கு மிரட்டல் விடுத்தது மட்டுமல்லாமல், பிரதமர் அலுவலகம், ரயில்வே அமைச்சகம், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அலுவலக்ம், மிகப்பெரிய தங்கும் விடுதி என பல இடங்களுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும், ஜக்தீஷ் உய்கே, பயங்கரவாதம் தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதி இருப்பதாகவும், கடந்த 2021ஆம் ஆண்டு வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டதும் தெரியவந்தது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஜக்தீஷ் உய்கேவிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.