டெல்லியில் சிஏஏ ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையே ஏற்பட்ட கலவரம் திட்டமிடப்பட்ட ஒன்று என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியதற்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிஏஏ எதிர்ப்பாளர்களுக்கு எதிராக சிஏஏ ஆதரவாளர்கள் டெல்லியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய பேரணிக்கு பின்னர் அங்கு கலவரங்கள் வெடித்தன. வடகிழக்கு டெல்லியில் உள்ள ஜாப்ராபாத், மஜுபூர், சாந்த்பாக், குரேஜ்காஸ், பாஜன்புரா ஆகிய பகுதிகளில் இரு தரப்பினரும் கற்களை கொண்டு கடுமையான தாக்குதல்களில் ஈடுபட்டனர். இந்த கலவரங்களில் 150 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் சூழலில் பலியானவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த வன்முறைக்கு பொறுப்பேற்று மத்திய உள்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என சோனியா காந்தி கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து பேசியுள்ள மத்திய பிரகாஷ் ஜவடேகர், "காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் கருத்து துரதிர்ஷ்டவசமானது மற்றும் கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சமயங்களில் அனைத்து கட்சிகளும், நாட்டில் அமைதி காக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அதற்கு பதிலாக அரசாங்கத்தை குறை கூறுவது ஒரு மோசமான அரசியல்.
இந்த வன்முறையை அரசியலாக்குவது தவறு. அமித் ஷா எங்கே என்று அவர்கள் கேட்கிறார்கள். அவர் நேற்று கூட ஒரு கட்சி கூட்டத்தை நடத்தினார், அங்கு ஒரு காங்கிரஸ் தலைவரும் இருந்தார். உள்துறை அமைச்சர் காவல்துறைக்கு வழிகாட்டுதல்களை வழங்கியதுடன், காவல்துறையின் மன உறுதியையும் அதிகரிக்கும் வகையில் செயல்பட்டார். ஆனால் காங்கிரஸின் அறிக்கைகள் காவல்துறையின் மன உறுதியைப் பாதிக்கின்றன" என தெரிவித்துள்ளார்.