இந்திய ராணுவ ஹெலிகாப்டர் அருணாச்சலப் பிரதேசத்தில் விபத்துக்குள்ளானதில், ஹெலிகாப்டரில் பயணித்த 2 விமானிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா வகை ஹெலிகாப்டர் ஒன்று அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு அசாமின் மிஸாமாரி பகுதிக்கு செல்ல இருந்தது. மாண்டாலா மலைப்பகுதியில் பறந்து கொண்டு இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பினை இழந்தது. காலை 9 மணிக்கு புறப்பட்ட ஹெலிகாப்டர் 9.15க்கு தனது தொடர்பை இழந்ததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் கடைசியாக தகவல் கிடைத்த பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
பகல் 12.30 மணியளவில் ஹெலிகாப்டர் விழுந்த இடம் கண்டறியப்பட்டது. வானிலை பனிமூட்டமாகக் காணப்பட்டதால் மீட்புப் பணிகளிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் பயணித்த இரு ராணுவ அதிகாரிகளின் உடல்களும் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன. அடையாளம் காணப்பட்ட ராணுவ அதிகாரிகள் லெப்டினன்ட் வி.வி.பி.ரெட்டி மற்றும் அவரது உதவி விமானி மேஜர் ஜெயந்த் என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் உயிரிழந்த 37 வயதான ஜெயந்த் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் எனும் கிராமத்தை சேர்ந்தவர். இன்று மாலை 5 மணியளவில் ஜெயந்த்தின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.