டெல்லியில் மகளிர் ஆணைய தலைவிக்கே பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தலைநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மகளிர் ஆணைய தலைவராக இருப்பவர் ஸ்வாதி மாலிவால். இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது நுழைவு வாயிலுக்கு எதிரே இன்று அதிகாலை 3 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மது போதையில் வந்த கார் ஓட்டுநர், ஸ்வாதி மாலிவாலுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஸ்வாதி மாலிவால் அந்த நபரை பிடிக்க முயல, கார் ஓட்டுநர் ஸ்வாதி மாலிவாலின் கையை காரில் சிக்க வைத்து சுமார் 10 - 15 மீட்டர் தூரம் தரதரவென இழுத்துச் சென்றுள்ளார். பின்னர் அந்த கார் ஓட்டுநர் அங்கிருந்து தப்பிச் சென்றிருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ஸ்வாதி மாலிவால் டெல்லி போலீசில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் விசாரணை மேற்கொணட போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில், ஸ்வாதி மாலிவாலிடம் அத்துமீறியவர் 47 வயதான ஹரிஷ் சந்திரா என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஹரிஷ் சந்திரா மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஸ்வாதி மாலிவால் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மகளிர் ஆணைய தலைவருக்கே டெல்லியில் பாதுகாப்பு இல்லை என்றால் இங்குள்ள சூழ்நிலையை கற்பனை செய்து பாருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.