பெருநிறுவனங்கள் வங்கிகளைத் துவங்கலாம் என்ற ரிசர்வ் வங்கியின் நிபுணர் குழு பரிந்துரைக்கு முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தனியார் வங்கிகளின் உரிமையாளர்கள், பங்குதாரர்கள் ஆகியோருக்கான நெறிமுறைகளை மறு ஆய்வு செய்வதற்காக பி.கே.மொஹந்தி தலைமையிலான குழு கடந்த வாரம் தனது பரிந்துரைகளை ரிசர்வ் வங்கியிடம் வழங்கியது. இதில், பெருநிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் வங்கிகள் தொடங்க உரிய சட்டத்திருத்த நடவடிக்கை எடுக்கலாம் என நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. மொஹந்தி குழுவின் இந்த பரிந்துரை, நாட்டின் நிதி அமைப்பில் கார்ப்பரேட் நிறுவனங்களின் தாக்கத்தை அதிகரிக்கும் எனக் கூறி பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன.
இந்நிலையில் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், "வங்கித் துறையில் மொத்த வைப்பு 140 லட்சம் கோடி ரூபாய். பெருநிறுவனங்கள் வங்கிகளை சொந்தமாக வைத்திருக்க அனுமதிக்கப்பட்டால், அவை ஒரு சிறிய பங்கு முதலீட்டில், நாட்டின் நிதி ஆதாரங்களில் மிகப்பெரிய அளவைக் கட்டுப்படுத்தும். வணிக நிறுவனங்களின் பிடியிலிருந்து வங்கிகள் மீட்டு 50 ஆண்டுகள் ஆகிறது. இந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்ட எண்ணற்ற நன்மைகளை, இந்த யோசனை சீர்குலைத்துவிடும். இந்த யோசனையை ரிசர்வ் வங்கி தெரிவிக்கவில்லை. இதில் மோடி அரசின் திட்டம் போலத் தெரிகிறது. ரிசர்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்தி, மத்திய அரசு தனது செயல்திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கும் இதேபோல் ரிசர்வ் வங்கியைத் தவறாகப் பயன்படுத்தியது.
வங்கிகள் எப்போதும் பொதுத்துறையாகவே நீடிக்க வேண்டும். இந்த திட்டம், பொதுத்துறை வங்கிகளைப் பலவீனப்படுத்திவிடும். வங்கிகள் தொடங்கும் உரிமத்தை யார் பெறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். அரசியல் தொடர்புடைய பெருநிறுவனங்களுக்குத்தான் உரிமம் கிடைக்கும். இது, வங்கிகளை கைக்குள் போட்டுக்கொள்ளும் சதித்திட்டம். ஆகவே, இந்த பிற்போக்குத்தனமான யோசனையை அமல்படுத்தக்கூடாது. இதைச் செயல்படுத்த மாட்டோம் என்று மத்திய அரசு உடனே அறிவிக்க வேண்டும். இந்த யோசனைக்கு எதிராக அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றை அணுகி பொதுக்கருத்தை உருவாக்குவோம். இதை எல்லோரும் எதிர்க்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.