
சில தினங்களுக்கு முன்பு, இரண்டு நாள் பயணமாக அமெரிக்காவுக்குச் சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துப் பேசினார். அந்த சந்திப்பின் போது, வரிக்கொள்கை, எண்ணெய், எரிசக்தி, அணுசக்தி, சட்டவிரோத குடியேற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்தியதாகத் தகவல் வெளியானது. அதோடு அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருக்கும் இந்தியர்களை, இந்தியாவிற்குத் திரும்ப அழைக்கப் பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்தாகக் கூறப்பட்டது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி சந்திப்பு குறித்து, காங்கிரஸ் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்.பியுமான சசி தரூர் பாராட்டிப் பேசியிருந்தார். அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடியுடனான சந்திப்பு நம்பிக்கைக்குரியது என்று சசி தரூர் பேசியிருந்தார். அதுமட்டுமல்லாமல், கேரளாவில் இடதுசாரி ஆட்சியில் தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது என்று பத்திரிகை ஒன்றியில் சசி தரூர் பாராட்டி எழுதியிருந்தார். கேரளா அரசை பாராட்டி சசி தரூர் கூறிய கருத்து, மாநில காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதற்கிடையே, பிரதமர் மோடியையும், கேரளா அரசையும் பாராட்டிப் பேசியிருந்த சசி தரூர் கூறிய கருத்துக்கள், காங்கிரஸ் கட்சி தலைமையும் விரும்பவில்லை என்று தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சசி தரூர், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, கட்சியில் தனது பணி என்ன என ராகுல் காந்தியிடம் சசி தரூர் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. மேலும், சசி தரூரின் கோரிக்கைகள் தொடர்பாக ராகுல் காந்தி சாதகமான பதிலை அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.