அஸ்ட்ராஜெனெகாவின் கோவிஷீல்ட் தடுப்பூசியை, இந்தியாவில் தயாரித்துவரும் சீரம் நிறுவனம், அமெரிக்காவின் நோவாவாக்ஸ் மருந்து நிறுவனம் தயாரித்துவரும் கரோனா தடுப்பூசியை இந்தியாவில் கோவோவாக்ஸ் என்ற பெயரில் தயாரித்துவந்தது. இந்நிலையில், இந்த தடுப்பூசிக்கு நேற்று (17.12.2021) உலக சுகாதார நிறுவனம் அவசரகால அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மேலும் இந்தக் கோவோவாக்ஸ் தடுப்பூசி, கோவாக்ஸ் திட்டத்தில் இருப்பதாகவும், இதற்கு அவசரகால அனுமதி வழங்கப்பட்டிருப்பது குறைந்த வருமானம் கொண்ட நாடுகளைச் சேர்ந்த மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தும் முயற்சியை ஊக்கப்படுத்துமென உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தக் கோவோவாக்ஸ் தடுப்பூசி, இரண்டு டோஸ்களை உடையது. குழந்தைகளுக்கான கோவோவாக்ஸ் தடுப்பூசி இன்னும் ஆறு மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என்றும் சீரம் நிறுவனம் ஏற்கனவே கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.