கரோனா இரண்டாம் அலை காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், நாளை ஜூலை 16ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்திருந்தார்.
முதற்கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையும், கல்லூரிகளும் திறக்கப்பட இருப்பதாக கூறப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த முடிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அறிவித்தபடி நாளை பள்ளிகள் திறக்கப்பட மாட்டாது என புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இன்று புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுடன் ஆலோசனை மேற்கொண்ட பின்னர் வெளியே வந்த அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களைச் சந்திக்கையில் இதனைத் தெரிவித்தார்.
பொதுமக்கள், அரசியல் கட்சியினர், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று நாளை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு தள்ளிவைக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பு குறித்து நாளை முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வி செயலாளர் ஆலோனை நடத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.