உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையேயான கலாச்சாரத் தொடர்பைப் புதுப்பிக்கும் நோக்கத்தில் வாரணாசியில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நாட்டின் 75-வது சுதந்திரதினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, இந்த நிகழ்ச்சிக்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற உணர்வுடனும் தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் முன்னிலைப்படுத்தும் நோக்கத்திலும் காசி தமிழ்ச் சங்கமம் நடைபெறுகிறது. வரும் டிசம்பர் 16 ஆம் தேதி வரை ஒரு மாத காலம் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் வாரணாசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான பல நூற்றாண்டு கால பழமையான நாகரீகத் தொடர்பை மீண்டும் உயிர்ப்பிப்பது தொடர்பான கருத்தரங்குகள், கல்வி சார்ந்த உரையாடல்கள் மற்றும் விவாதங்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அவற்றில் 2,592 பேர் பயணம் செய்ய உள்ளனர். முதலாவது ரயில் நேற்று (17/11/2022) முன்தினம் புறப்பட்டது. காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று (19/11/2022) முறைப்படி தொடங்கி வைக்கிறார்.
வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் அரங்கத்தில் தொடக்க விழா நடைபெறுகிறது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவின் கலாச்சார தொடர்புகளையும் அழகிய தமிழ் மொழியையும் கொண்டாடும் வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியான காசி தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்க வாரணாசிக்கு வருகை தர ஆவலுடன் காத்திருக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.