
பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். மற்றொருபுறம் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மார் என்ற பகுதி ராணுவ தளங்கள் அதிகம் உள்ள பகுதியாகும். இதன் கரணமாக அந்த பகுதியை நோக்கிக் கடந்த 24 மணி நேரத்தில் ட்ரோன் மூலம் பல முறை தாக்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இருப்பினும் இந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன.
இந்நிலையில் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் யாரும் தங்களது வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று காவல் துறையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளும் மற்ற வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே எந்த போக்குவரத்தும் இயக்கக் கூடாது என்றும் அறிவிப்பை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர்.