தென்மேற்கு பருவமழை 8- ஆம் தேதி தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. அரபிக்கடலில் உருவான இந்த புயலுக்கு ‘வாயு’ என்று பெயர் சூட்டப்பட்டது. கோவாவிற்கு வட மேற்கே 450 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தென் மேற்கே 290 கிலோ மீட்டர் தொலைவிலும் நகர்ந்து வருகிறது.
இந்த அதி தீவிர சூறாவளி புயல் நாளை அதிகாலை குஜராத் மாநிலம் போர்பந்தர் மற்றும் டையூ இடையே கரையை கடக்கும் என்றும், கரையை கடக்கும் போது மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீசும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 165 கிலோ மீட்டர் வரை பலத்த சூறாவளி காற்று வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் புயல் தெரிவித்துள்ளது. புயல் காரணமாக கேரளா, கர்நாடகம், மகாராஷ்ட்ரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்களில் மிக கன மழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வாயு புயல் குறித்து ஆலோசனை நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில் குஜராத் மாநில அதிகாரிகள், மத்திய அரசு அதிகாரிகள், பேரிடர் மீட்புத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அமைச்சர்களுடன் ஆலோசனை செய்தார். பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் வாயிலாக தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் குஜராத் மாநிலத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் மட்டும் 1.65 லட்சம் மக்கள் அரசு முகாம்களின் தங்க வைக்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தில் சூறைக்காற்று பலமாக வீசுவதால் பொது மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அம்மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. முகாம்களின் தங்கியுள்ள மக்களுக்கு உடைகள், உணவுகள் மற்றும் மருத்துவ பொருட்கள் தயார் நிலையில் உள்ளதாக பேரிடர் மீட்பு படையின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.