Skip to main content

“தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் யார்?” - வெளியான விவரம்!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Details revealed Who were the lost his life in may 7 

ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. அந்த வகையில் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர்.

இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூரில் கடந்த 7ஆம் தேதி (07.05.2025) நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்ட 5 பயங்கரவாதிகள் குறித்த அதிகாரப்பூர்வ விவரங்கள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் லஷ்கர் - இ - தொய்பா அமைப்பைச் சேர்ந்த 2 பயங்கரவாதிகளும், ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளும் ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் முரித்கே பகுதியில் லஷ்கர் இ- தொய்பாவின் பொறுப்பாளராக இருந்த முடாஷர் கடியன் காஷ் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்தார் என்ற விபரமும் வெளியாகியுள்ளது. முடாஷ்ர் கடியன் இறுதிச்சடங்கில் பாகிஸ்தான் ராணுவத்தினர் பங்கேற்று மரியாதை செய்தது குறிப்பிடத்தக்கது.

அதே சமயம் ஜெய்ஷ்- இ - முகமது அமைப்பின் தலைவரான மசூத் அஸாரின் சகோதரரும், கந்தகார் விமான கடத்தலில் தொடர்புடையவருமான முகமது யூசுப் அஸாரும் ஆபரேஷன் சிந்தூரில் உயிரிழந்தந்தார். இவர் ஜெய்ஷ் - இ - முகமது அமைப்புக்குப் பயிற்சி தருவது போன்ற தீவிரவாத செயல்களுக்கு துணை போனவர் எனக் கூறப்படுகிறது. ஜெய்ஷ் - இ - முகமது அமைப்பின் பொறுப்பாளர் ஹபீஸ் முகமது ஜமீல் என்பவர் கொல்லப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பயங்கரவாத செயலுக்கு நிதி திரட்டுவது, இளைஞர்களை மூளைச்சலவை செய்து ஆட்களைச் சேர்ப்பது உள்ளிட்டவை இவரது முக்கிய பணி ஆகும்.

மேலும் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி காலித் என்கிற அபு ஆகாஷா உயிரிழந்தார். இவர் காஷ்மீரில் பல்வேறு தாக்குதலில் ஈடுபட்டவர் ஆவார். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆயுதக் கடத்தலில் ஈடுபட்டவர் எனவு கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தளபதியாக இருந்த முகமது ஹசன்கானும் உயிரிழந்தார். இவர் காஷ்மீரில் நடைபெறும்  தாக்குதல்களை ஒருங்கிணைப்பதில் இவர் மூளையாக செயல்பட்டவர் எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்