Skip to main content

நாம் தமிழர் கட்சிக்கு புதிய சின்னம் ஒதுக்கீடு; அறிவித்த சீமான்!

Published on 10/05/2025 | Edited on 10/05/2025

 

Seeman announces allocation of new symbol for Naam Tamilar Party!

சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி, கடந்த தேர்தல்களில் ‘கரும்பு விவசாயி’ சின்னத்தில் தொடர்ந்து போட்டியிட்டு வந்தது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, சின்னம் தொடர்பான குழப்பம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டது. அதாவது ‘கரும்பு விவசாயி’ சின்னத்தை கர்நாடகாவைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இது நாம் தமிழர் கட்சியினரிடயே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத் தொடர்ந்து ‘சீமானின் சின்னம் என்ன?’ என அக்கட்சியினர் போஸ்டர் மூலம் யூகங்களை வெளிப்படுத்தி வந்தனர்.

முதலில் வருபவருக்கே சின்னம் என்ற அடிப்படையில் ‘கரும்பு விவசாயி’ சின்னம் மற்றொரு கட்சிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்பட்ட நிலையில், ஆறு சதவீதத்திற்கு மேல் வாக்கினை பெற்றுள்ள தங்களுடைய கருத்தைக் கேட்காமல் மற்றொரு கட்சிக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அநீதி என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து வந்தார். தொடர்ந்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

இதையடுத்து ‘மைக்’ சின்னத்திலேயே நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கடந்த 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டனர். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் கூட்டணியின்றி தனித்துப் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, 35 லட்சத்து 60 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இதனால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக மாறியது. தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், நாம் தமிழர் கட்சி 8.19 சதவீத வாக்குகளை எடுத்ததால் நாம் தமிழர் கட்சி அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாக உருவெடுத்தது. 

இந்த நிலையில், அடுத்தாண்டு 2026 தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. இதில், நாம் தமிழர் கட்சி, தங்களது கட்சி வேட்பாளர்களை தற்போதில் இருந்து அறிவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து சீமான் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, ‘மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்ட நாம் தமிழர் கட்சிக்கு ‘விவசாயி’ சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்து 10-05-2025 அன்று அறிவித்துள்ளது’ எனப் பதிவிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்