மகாராஷ்ட்ரா மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலால் பள்ளி, கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், பல்வேறு மாநில அரசுகளும் மாநில கல்வி வாரியத்தின் கீழ் வரும் பள்ளிகளில் பொதுத் தேர்வுகளை ரத்து செய்து வருகிறது. மேலும், சி.பி.எஸ்.இ. மற்றும் ஐ.சி.எஸ்.இ. பொதுத்தேர்வுகளும் நாடு முழுவதும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில், கல்லூரி செமஸ்டர் தேர்வுகளையும் ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கை மாணவர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.
இந்நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்கும்விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படாது என அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். இதுகுறித்து மஹாராஷ்ட்ரா முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "எந்தவொரு தேர்வு அல்லது வகுப்புகளையும் நடத்துவதற்குத் தற்போதைய சூழ்நிலை உகந்ததாக இல்லாததால், தொழில் அல்லாத / தொழில்முறை படிப்புகளின் இறுதி ஆண்டு / இறுதி செமஸ்டர் தேர்வை நடத்த வேண்டாம் என்று மகாராஷ்ட்ரா அரசு முடிவு செய்துள்ளது.
பல்கலைக்கழகங்கள் தீர்மானிக்கும் முறைகளின்படி முடிவுகளைக் கணக்கிட்டு பட்டங்களை வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. தொழில்முறை படிப்புகள் தொடர்பான மாநில அரசின் முடிவை அங்கீகரிக்கவும், பல்கலைக்கழகங்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்கவும் AICTE, COA, PCI, BCI, NCTE மற்றும் NCHM போன்ற தேசிய அளவிலான தலைமை அமைப்புகளுக்கு அறிவுறுத்துமாறு முதல்வர் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.