மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தாலும், அக்கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மம்தா முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட மம்தா, ஆறு மாதத்திற்குள் சட்டமன்ற உறுப்பினராக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
இதற்கிடையே உத்தரகண்டில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடாமல் முதல்வரான பாஜகவைச் சேர்ந்த திராத் சிங் ராவத், தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது முதல்வர் பதவியைத் தொடர ஆறு மாதங்களுக்குள் சட்டமன்றத்தின் உறுப்பினராக வேண்டிய கட்டாயம் அவருக்கும் இருந்துவந்த நிலையில், உத்தரகண்டில் இடைத்தேர்தல் நடப்பதற்கான குறைவு என்பதால் அவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனையடுத்து மேற்கு வங்கத்தில், மம்தா பதவியேற்று ஆறு மாதங்கள் நிறைவடைவதற்குள் இடைத்தேர்தல் நடக்குமா என சந்தேகம் எழுந்தது. ஒருவேளை ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடைபெறவில்லையென்றால் மம்தா தனது பதவியை இழக்க நேரிடும். இந்தநிலையில், மேற்கு வங்க சட்டமன்றத்தில் மேலவை அமைப்பதற்கான தீர்மானத்தை திரிணாமூல் அரசு நேற்று (06.07.2021) நிறைவேற்றியுள்ளது.
இந்த தீர்மானத்தின்படி மேலவை கொண்டுவரப்பட்டால், மம்தா மேலவைக்குத் தேர்தெடுக்கப்படுவதன் மூலம் சட்டமன்றத்தின் உறுப்பினராகலாம். இதன்மூலம் இடைத்தேர்தல் நடைபெறாவிட்டாலும் மம்தா முதல்வராக தொடரலாம். ஆனால் மேலவை அமைப்பதற்கான தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். அதன்பிறகு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்படவேண்டும். பின்னர் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்திய நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ளது என்பதால், அந்தக் கூட்டத்தொடரிலேயே மேலவை அமைப்பதற்கான மேற்கு வங்கத்தின் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, நவம்பர் மாதத்திற்குள் மேலவை அமைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால், நாடாளுமன்ற மக்களவையில் பாஜக பெரும்பான்மை வகிப்பதால் மேற்கு வங்கத்தின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்படுவதில் சிக்கல் உருவாகியுள்ளது.
மேற்கு வங்க சட்டமன்றத்தில் மேலவை கொண்டுவரப்படும் என்பதை திரிணாமூல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியாகவே அளித்தது. ஆனால் மீண்டும் ஆட்சியைப் பிடித்த சில மாதங்களுக்குள் மேலவை கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படுவது, மம்தா தனது பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் முயற்சியாகவே கருதப்படுகிறது.