
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்க ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கையின் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. அதே சமயம் போர் ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது.
அந்த வகையில் ராஜோரி பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு - காஷ்மீர் அரசு அதிகாரியான மாவட்ட கூடுதல் மேம்பாட்டு ஆணையர் ராஜ்குமார் தாப்பா மற்றும் பொதுமக்கள் 4 பேர் உள்ளிட்ட மொத்தம் 5 பேர் பலியாகினர். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் இன்று (10.05.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பாதுகாப்புப் படைத் தலைவர் அனில் சவுகான், முப்படைகளின் தலைமை தளபதிகள், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது எல்லையில் நிலவும் பதற்றம், அங்கு மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக இந்த உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மோதல்கள் தீவிரம் அடையக்கூடிய சூழலில் எல்லையில் பாதுகாப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு தொடர்பாக கடந்த 3 நாட்களாக பல்வேறு ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.