
நிஹாரிகா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் ஆர்யா வழங்கும் படம் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’. இதில் கீதிகா, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்திற்கு ‘ஆஃப்ரோ’(ofRo) என்பவர் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன் வெளியானது. படம் மே 16ஆம் தேதி வெளியாகிறது. இதையொட்டி படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் சந்தானம், ஆர்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் சிம்புவும் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் ஆர்யா குறித்து பேசிய சந்தானம் பல்வேறு நிகழ்வுகளைப் பகிர்ந்தார். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது. அவர் பேசியதாவது, “என்னுடைய உயிர் நண்பன் ஆர்யா. நாங்க இருவரும் ஒரு கல்லூரியின் கதை படத்துல தான் ஃப்ரெண்ட்ஸ் ஆனோம். அப்போது ஹீரோயின்ஸ்கு ஃப்ரெண்ட்ஸா பெங்களூருல இருந்து ரிச்- கேர்ள்ஸ கூட்டு வருவாங்க. அந்த சமயத்துல என்னை பெரிசா வெளியே தெரியாது. ஆர்யாவும் அறிந்தும் அறியாமலும் நடிச்சு முடிச்சிருந்தான். ஆனால் ரிலீஸ் ஆகல. அப்போ எங்களுக்கு கேரவன்லாம் கிடையாது. ஒன்னா தான் உட்கார்ந்து சாப்பிடுவோம்.
அப்போ அந்த ரிச் - கேர்ள்ஸ் நீங்க யாருன்னு என்னிடம் கேட்டாங்க, உடனே ஆர்யா, என்னது... இவரையா யாருன்னு கேட்டிங்க, இவர் தான் சௌத் இந்தியன் காமெடி சூப்பர் ஸ்டார்-னு சொல்லிட்டான். அந்த பொன்னுங்க டவுட்டா பார்த்தாங்க. உடனே ஆர்யா, மச்சான் அந்த பொன்னுங்க டவுட்டா பார்க்குறாங்க, உடனே ஒரு காமெடி பண்ணுன்னு சொல்லிட்டான். நானும் அவங்க முன்னாடி எழுந்து பழைய பாட்டுக்கு இப்ப இருக்கிற நடிகர்களெல்லாம் எப்படி ஆடியிருப்பாங்கன்னு டான்ஸ் ஆடி காமிச்சேன். அவங்க சிரிக்கவே இல்ல. உடனே ஆர்யா, மச்சான் இது பத்தல, இன்னும் நல்லா பண்ணுன்னு சொன்னான். அப்புறம் அவனே கூட வந்து, ஹீரோயினா நடிச்சான். நானும் ஹீரோவா ஆடிக்கிட்டு இருக்கேன். ரெண்டு பேரும் ஆடுனத டைரக்டரும் புரொடியூசரும் பார்த்துட்டாங்க. ஆர்யாவிடம் அவங்க கேட்ட போது, இல்ல சார் சந்தானத்தை ப்ரூவ் பண்ண சொன்னேன்னு சொன்னான். அப்புறம் நானே ஆர்யாவிடம் மச்சான் நான் காமெடியனா இல்லாம கூட போறேன். எனக்கு ப்ரூவ்-லாம் பண்ண வேணாம் விட்ருன்னு சொன்னேன். அதுக்கு அப்புறமும் காமெடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை ஆர்யா விடவே இல்லை.
சேட்டை படம் அப்ப காமெடி சூப்பர் ஸ்டார்னு டைட்டிலே போட்டுவிட்டான். நான் லிங்கா படத்துல நடிக்கும் போது ரஜினி சார் கூப்பிட்டு கேட்குறார், நீங்க காமெடி சூப்பர் ஸ்டாரான்னு. நான் உடனே இல்ல இல்ல சார், ஆர்யா தான் போட்டான்னு சொன்னேன். நீங்க சொல்லாமலா ஆர்யா போட்டார்னு ரஜினி கேட்டார். சார் சத்தியமா நான் சொல்லல சார்னு சொன்னேன். என்னை அந்த லெவலுக்கு மாட்டி விட்டுட்டான். எங்க நட்பு அந்த மாதிரி. இப்ப நான் சொன்னதெல்லாம் ஒன்னுமே இல்ல. இப்ப ஒன்னு சொல்றேன் அதை கேளுங்க.
இந்த படம் ஆரம்பிச்சோம். இயக்குநர் ஆர்யாகிட்ட ஒன் - லைன் சொல்லிட்டாரு... ஆர்யாவுக்கும் பிடிச்சு போய்டுச்சு, பண்லாம்னு சொல்லிட்டான். இது நடந்து ஆறு மாசம் ஆச்சு. அப்புறம் முழுக் கதையை ஆர்யா கேட்டான். இந்த கேப்புல ரெண்டு படம் நடிச்சுட்டேன். அப்புறம் ஒரு பழைய வீட்டோட ஒரு இடம் வாங்கினேன். அந்த வீட்டை புதுசா மாத்திடலாம்னு ரெடி பண்ணிட்டு இருந்தேன். எங்க அம்மாவும் மனைவியும் வெள்ளி கிழமை ஆனா அந்த வீட்டுக்கு போய்விட்டு விளக்கு ஏத்துவாங்க. இது நடந்துட்டு இருக்க ஆர்யா முழுக் கதையும் கேட்டு ஃபோன் பண்ணான். எங்க இருக்கன்னு கேட்டு நான் ரெடி பண்ணிட்டு இருந்த அந்த பழைய வீட்டுக்கு வந்தான். வந்து கதை நல்லாருக்கு, எவ்ளோ பட்ஜெட்டுனாலும் நம்ம பண்ணிடலாம்னு சொல்லி, இந்த வீட்டை பத்தி கேட்டான். நானும் என்னுடைய பிளானை சொன்னேன்.
வீட்டை பார்த்த அவன், மச்சான் இந்த வீடு நல்லாவே இல்ல. இடிச்சுருன்னு சொல்லிட்டான். நானும், இல்ல மச்சான், நான் வீட்டுல எல்லாம் சொல்லிட்டேன், இடிச்சா நிறைய செலவாகும், டைமாகும்னு சொன்னேன். அவன் உடனே நீ கம்முனு இரு, நீ இப்படி தான் ஏடாகூடமா எதாவது பண்ணிட்டு அப்புறம் இது சரியில்ல அது சரியில்லன்னு சொல்லுவ...நான் வீட்டை இடிக்க சொல்லிடுறேன்னு சொன்னான். வீட்டை இடிக்கச் சொல்லி அவன் ஃப்ரெண்டுக்கு ஃபோன் பண்ணி வீட்டு அட்ரெஸ் கொடுத்து வீட்டை இடிச்சு தரைமட்டமா ஆக்கிடுங்கன்னு சொல்லிவிட்டான். இது ஞாயிற்றுக் கிழமை நடக்குது. அடுத்த ரெண்டு மூணு நாள், வியாழன் கிழமை வரை வீட்டை இடிச்சு தரைமட்டமா ஆக்கிட்டாங்க. அடுத்த நாள் வெள்ளி கிழமை எங்க அம்மாவும் மனைவியும் விளக்கேற்ற வீட்டுக்கு போயிருக்காங்க. அவங்க கிட்ட நான் வீட்டை இடிச்சத சொல்லல, அவங்களும் வீட்டை காணும்னு தெரு தெருவா போய்ருக்காங்க. அப்புறம் எனக்கு ஃபோன் அடிச்சு, 'ராஜா... நம்ம வீட்டை காணும்ப்பா'ன்னு சொன்னாங்க. எனக்கு எப்படி சொல்றதுண்ணே தெரியல. அப்புறம் நடந்ததெல்லாம் சொன்னேன். அதுக்கு எங்க அம்மா, ஏண்டா ரெண்டு பேரும் படத்துல தானடா இப்படி பண்ணுவீங்க, நிஜத்திலுமா இப்படி பண்ணுவீங்க. ஒரு வீட்டை இடிச்சிட்டு கிரௌவுண்டா ஆக்கி வச்சிருக்கீங்கன்னு சொன்னாங்க. இந்த அளவுக்கு எங்களுடைய நட்பு இருக்குது.
கல்லூரியின் கதை படத்துல இருந்து இப்ப வரைக்கும் ரெண்டு பேரும் எதுக்குமே பயந்தது கிடையாது. வாழ்கிறவரையும் ஜாலியா வாழ்வோம். என்ன வருதோ அதை ஃபேஸ் பண்ணுவோம். இந்த ஒரு எனர்ஜி தான் இன்னைக்கு வரைக்கும் என்னையும் இந்த இடத்துல நிறுத்தியிருக்கு, ஆர்யாவையும் ஒரு தயாரிப்பாளரா இங்க உட்காரவச்சிருக்கு. என்னுடைய பிரச்சனையை தீர்த்து படம் தயாரிப்பதலாம், வேறு யாரா இருந்தா என் வீட்டு வாசலிலே தான் படுத்துட்டு இருந்திருப்பாங்க. ஆனா ஆர்யா அதையும் மீறி படம் தயாரிச்சிருக்கான். அவன் சொன்னது, இந்த படம் நடிச்சு முடிக்கிற வரைக்கும் வேறு எந்த படத்திலும் கமிட்டாகாத, ஃப்ரீயா பண்ணு, உன் பிரச்சனையை நான் பார்த்துக்குறேன். உன் வேலை, படத்தை ஜெயிக்குறது மட்டும்தான்னு சொன்னான். அதுக்காக இறங்கி இந்த படத்துல வேலை செஞ்சிருக்கேன். நிச்சயமா இந்த படத்தை ஆர்யாவுக்கு வெற்றி படமா கொடுப்பேன்” என்றார்.