ஈக்வடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கிய நித்தியானந்தா அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க திட்டமிட்டு வருவதாக தகவல்கள் பரவின. அந்த நாட்டிற்கு கைலாசா என பெயரிட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
மேலும் அதற்கான தனி பாஸ்போர்ட், கொடி உள்ளிட்டவைகளின் புகைப்படங்கள் என சிலவும் வெளியாகின. இந்நிலையில் இந்த தகவல்களை ஈக்வடார் நாட்டு தூதரகம் மறுத்திருந்தது. தங்கள் நாட்டிடம் நித்தியானந்தா அடைக்கலம் கேட்டதாகவும், ஆனால் தங்கள் மறுத்ததையடுத்து, அவர் அப்போதே ஹெய்டி தீவிற்கு சென்றிருக்கலாம் எனவும் அந்நாட்டு தூதரகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில் இந்திய வெளியுறவு துறையும் நித்யானந்தாவை கண்டறிய முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் நேரலை செய்த நித்யானந்தா, கைலாசாவின் பெயரை ஸ்ரீகைலாஷா என மாற்றுவதாக தெரிவித்தார். மேலும் தான் கைலாசா தனி நாடு அறிவித்த பின்னர் அதை வரவேற்று லட்சக்கணக்கில் மி்ன்னஞ்சல்கள் குவிவதாகவும், இதுவரை 12 லட்சம் பேர் ஈ சிட்டிசன்ஷிப்புக்கு விண்ணப்பித்திருப்பதாகவும் தெரிவித்தார். "இவ்வளவு பெரிய வரவேற்பை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மின்னஞ்சல் அனுப்பியவர்களுக்கு ஒரு வேண்டுகோள். பதிலளிக்க கொஞ்சம் நேரம் கொடுங்கள். கைலாசா தனி நாடு வலைதளப் பக்கத்தை ஒரு நாளைக்கு 8 லட்சம் பேர் பார்ப்பதால், சர்வர் முடங்கிப்போய் வேறு சர்வர் மாற்ற வேண்டிய வந்தது" என கூறினார்.