தெலுங்கானா மாநிலம் சஹீராபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ள நிர்மலா சீதாராமன் கம்மாரெட்டி பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சோதனை நடத்தினார்.
கம்மாரெட்டி மாவட்டத்தில் அம்மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் வாங்கும் ஒரு கிலோ அரிசிக்கு மத்திய அரசு எவ்வளவு பணம் தருகின்றது என்றும் மாநில அரசு எவ்வளவு பணம் தருகின்றது என்றும் மக்கள் எவ்வளவு கொடுத்து அதை வாங்குகின்றனர் என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார். ஆட்சியருக்குப் பதில் தெரியாததால் 30 நிமிடங்கள் நேரம் எடுத்துக்கொள்ளுங்கள் என்றும் மீண்டும் நான் செய்தியாளர்களைச் சந்திக்கும் பொழுது வந்து கூறுங்கள் என்றும் கூறியுள்ளார்.
இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய நிதி அமைச்சர் ஒவ்வொரு கிலோ ரேஷன் அரிசிக்கும் 30 ரூபாயை மத்திய அரசும் 4 ரூபாயை மாநில அரசும் மானியமாக வழங்குகிறது என்றும் பிரதமர் படம் உள்ள பதாகைகளை நியாய விலைக்கடைகளில் வைக்கவேண்டும் என்றும் பதாகைகள் இருப்பதை ஆட்சியராகிய நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்திற்குச் செல்லும் வழியில் நிர்மலா சீதாராமன் சென்ற வாகனத்தின் முன்பு சில காங்கிரஸ் தொண்டர்கள் மறியலில் ஈடுபட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.