சமீபத்தில் தண்டவாளத்தில் சிக்கிய குழந்தையை, ரயில்வே ஊழியர் ஒருவர் கைப்பற்றிய வீடியோ சமூகவலைதளங்கில் வைரலானது. ரயில்வே ஊழியர் குழந்தையை காப்பாற்றிய இந்த சம்பவம், மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் நடந்துள்ளது. அம்மாநிலத்தில் உள்ள வாங்கனி ரயில் நிலையத்தில், பார்வையற்ற பெண்மணி சிறுவயது பெண்ணுடன் வந்துள்ளார்.
அப்போது அந்த சிறுமி தண்டவாளத்தில் தவறி விழுந்துவிட்டது. இதனால் பார்வையற்ற தாய் தனது குழந்தையை தேடி தவித்தார். அதேநேரத்தில் அந்த தண்டவாளத்தில் ரயில் வந்தது. அப்போது அங்கிருந்து ரயில்வே ஊழியர் சிறுமியை காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி ஓடிவந்தார். இரயில் வேகமாக வந்ததால், ஒருகணம் தண்டவாளத்திரிலிருந்து வெளியேற நினைத்த அவர், அடுத்த கணமே தனது முடிவை மாற்றிக்கொண்டு சிறுமியை தண்டவாளத்திலிருந்து தூக்கி பிளாட்பாரத்தில் விட்டுவிட்டு, அவரும் ஏறி தப்பித்தார்.
ரயில்வே ஊழியரின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில், அந்த ரயில்வே ஊழியர் மயூர் ஷெல்கே என்பவர் என தெரிய வந்தது. இதனையடுத்து வாங்கனி ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் இணைந்து மயூர் ஷெல்கேவுக்கு கரவொலி எழுப்பி பாராட்டு தெரிவித்தனர். மேலும் அவரை பாராட்டி சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் மத்திய ரயில்வே துறை அமைச்சர், மயூர் ஷெல்கேவை பாராட்டி 50 ஆயிரம் பரிசுத்தொகை அறிவித்துள்ளார்
குழந்தையை காப்பாற்றியது குறித்து பேசிய மயூர் ஷெல்கே, "கண்பார்வையற்ற தாய் தனது குழந்தையை காப்பாற்ற தவிப்பதை பார்த்து குழந்தையை காப்பாற்ற முடிவு செய்ததாகவும், குழந்தையை காப்பாற்ற ஓடும்போது தானும் ஆபத்தில் சிக்கலாம் என நினைத்தாகவும் கூறிய அவர், கட்டாயம் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என நினைத்தேன். நல்லவேளையாக என்னால் குழந்தையை காப்பாற்ற முடிந்தது" என கூறியுள்ளார்.