கேரளாவில் 19 நாட்களாக எந்தவித கரோனா அறிகுறியும் இல்லாத மாணவிக்கு,சோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரசால், சுமார் 13 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74,000-ஐ கடந்துள்ளது. மேலும், 2,86,000 பேர் இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். இந்தியாவில் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,281லிருந்து 4,421 ஆக உயர்ந்துள்ளது. இதில் 114 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 326 பேர் வைரஸ் தாக்கத்திலிருந்து மீண்டு குணமாகியுள்ளனர். இந்நிலையில் கேரளாவில் 19 நாட்களாக எந்தவித கரோனா அறிகுறியும் இல்லாத மாணவிக்கு,சோதனை மூலம் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவின் பத்தனம் திட்டா பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் டெல்லியில் படித்து வந்துள்ளார்.கரோனா ஊரடங்குக்கு முன்பு தனது சொந்த ஊருக்குத் திரும்பிய அந்த மாணவி, பாதுகாப்பு நடவடிக்கையாகத் தனிமைப்படுத்தப்பட்டார்.மார்ச் 17 ஆம் தேதியன்று கேரளா வந்த அந்த மாணவிக்கு 19 நாட்கள் கண்காணிப்பிற்குப் பின்னர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 19 நாட்களாகத் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவருக்கு எவ்வித கரோனா அறிகுறிகளும் தென்படாத சூழலில்,அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.ஆனால் அந்த சோதனையில் அவருக்கு கரோனா இருப்பதாக முடிவுகள் வந்துள்ளன.பொதுவாக வைரஸ் பாதிக்கப்பட்ட 14 நாட்களில் அறிகுறிகள் தென்படத் துவங்கும் என்பதைக் கொண்டே மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனால் 19 நாட்களாக எந்த அறிகுறியும் தென்படாத அந்த மாணவிக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.